Welcome to Thulir IAS Academy
Wars against East India Company in Tamil

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நிறுவப்படுதல்

பிளாசிப் போர் (1757)

வங்காள நவாப் அலிவர்திகான் 1756இல் இறந்த பின்பு அவரது பேரன் சிராஜ்-உத்- தெளலா வங்காளத்தின் அரியணை ஏறினார்.

சிராஜ்-உத்-தௌலாவின் பலவீனத்தையும், புகழற்ற நிலையையும் தனக்கு சாதகமாக்கிய ஆங்கிலேயர்கள் அவரது அதிகாரத்தை கைப்பற்ற முனைந்தனர்.

இருட்டறை துயரச் சம்பவம் (1756)

சிராஜ்-உத்-தௌலாவின் படை வீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைப்பிடித்து கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் காற்று புகாத ஒரு சிறிய இருட்டறையில் ஓர் இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தனர்.

மறுநாள் காலை அறையை திறந்தபோது அவர்களுள் 123 பேர் மூச்சு திணறி இறந்திருந்தனர். இது வரலாற்றில் இருட்டறை துயரச் சம்பவம் என்றழைக்கப்படுகிறது.

இவ்வெண்ணத்தை புரிந்துகொண்ட சிராஜ் - உத்-தௌலா அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினார். கல்கத்தாவிலுள்ள அவர்களது குடியேற்ற பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி, வங்காளத்தின் காசிம் பஜாரில் அமைந்துள்ள

வணிக மையத்தை கைப்பற்றினார். 1756 ஜுன் 20 அன்று ஆங்கிலேயரின் வில்லியம் கோட்டை நவாப்பிடம் சரணடைந்தது. ஆனால் ஆங்கிலப் படைத்தளபதி இராபர்ட் கிளைவ் கல்கத்தாவை மீட்டார்.

இறுதியாக, 1757 பிப்ரவரி 9ஆம் நாள் நடைபெற்ற அலிநகர் உடன்படிக்கையின் படி சிராஜ்-உத்-தௌலா, இராபர்ட் கிளைவின் நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றார். பின்னர் மார்ச் 1757இல் பிரெஞ்சுக் குடியேற்றமான சந்திர நாகூரை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.

பிளாசிப் போரானது சிராஜ்-உத்-தௌலா, பிரெஞ்சுக் கூட்டணிக்கும் மற்றும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே 1757 ஜூன் 23ஆம் நாள் நடைபெற்றது. இப்போரில் சிராஜ்-உத்தௌலாவின் படைகளை இராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் படைகள் தோற்கடித்தன. இப்போரின் முடிவில் ஏற்பட்ட குழப்பத்தால் கம்பெனி வங்காள கருவூலத்தின் மூலம் கிடைத்த பெரும் செல்வத்தைக் கொண்டு இராணுவத்தை பலப்படுத்தியது.

பிளாசிப் போர் வெற்றி ஆங்கிலேயரது அரசியல் அதிகாரத்தை இந்தியாவில் தொடங்கிவைத்தது மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு அவர்களது ஆதிக்கத்தை நீடிக்கவும் செய்தது.

பக்சார் போர் (1764)

1757ஆம் ஆண்டு பிளாசிப் போருக்குப் பின் வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளில் ஆங்கிலேயர்கள் தடையில்லா வணிக உரிமை பெற்றனர். வங்காளத்தின் '24 பர்கானா எனும் பகுதியை ஆங்கிலேயர் பெற்றனர்.


பிளாசிப் போருக்கு பின் வங்காளத்தின் அரியணை ஏறிய மீர்ஜாபர் (1757-1760) ஆங்கிலேயர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியதால் அவரை கட்டாயப்படுத்தி பதவியிலிருந்து நீக்கி விட்டு அவரது மருமகன் மீர்காசிம் என்பவரை வங்காள நவாப் ஆக்கினர்.

மீர்காசிம் ஆங்கிலேயருக்கு புர்த்வான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய பகுதிகளை வழங்கினார்.

அவர் வங்காளத்தின் தலைநகரை மூர்ஷிதாபாத்திலிருந்து மாங்கீர்க்கு மாற்றினார். தஸ்தக் என்றழைக்கப்படும் சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது மீர்காசிம் கோபமடைந்து கலகத்தில் ஈடுபட்டார்.

ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்ட அவர் அயோத்திக்கு தப்பி ஓடி அடைக்கலம் புகுந்து அங்கு சுஜா-உத்-தெளலா மற்றும் இரண்டாம் ஷா ஆலம் ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்.

பீகார் பகுதியின் பாட்னாவிற்கு மேற்கே 130 கி.மீ தொலைவில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட ஒரு சிறிய நகரமே பக்சார் ஆகும்.

1764ஆம் ஆண்டு அக்டோபர் 22இல் இங்கு நடைபெற்ற போரில் சுஜா -உத்- தெளலா, இரண்டாம் ஷா ஆலம், மீர்காசிம் ஆகியோர் ஆங்கிலப்படைத் தளபதி ஹெக்டர் மன்றோ வால் தோற்கடிக்கப்பட்டனர். இது ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் தீர்க்கமான வெற்றியாக அமைந்தது.

போரின் முடிவில் மீண்டும் மீர்ஜாபர் வங்காள அரியணையில் அமர்த்தப்பட்டார். மீர்ஜாபரின் இறப்புக்கு பின் அவரது மகன் நிஜாம் உத்-தௌலா வங்காள நவாப் ஆனார். 1765 பிப்ரவரி 20இல் நடந்த அலகாபாத் உடன்படிக்கையின் படி பக்சார் போர் முடிவுக்கு வந்தது.

அதன் படி வங்காள நவாப் தன்னுடைய இராணுவத்தின் பெரும் பகுதியை கலைத்துவிட வேண்டும் எனவும், கம்பெனியால் நியமிக்கப்பட்ட துணை சுபேதார் மூலம் இனி வங்காளம் நிர்வகிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இராபர்ட் கிளைவ் அயோத்தி நவாப் சுஜா-உத்-தௌலாவுடனும், முகாலயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலத்துடனும் தனித்தனியாக ஒப்பந்தம் செய்து கொண்டார்.

இவ்வாறாக இராபர்ட் கிளைவ் வங்காளத்தில் இரட்டையாட்சி முறையை கொண்டு வந்தார்.


முதல் கர்நாடகப் போர் (1746 -1748)


ஐரோப்பாவில் ஏற்பட்ட ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரில் பிரிட்டனும், பிரான்சும் எதிர் எதிர் அணிகளில் இருந்தன. இந்த பகைமை இந்தியாவிலும் எதிரொலித்தது.

அடையாறு போர் (1746)

சென்னையின் அடையாறு நதிக்கரையில் அமைந்துள்ள சாந்தோம் என்ற இடத்தில் கர்நாடக நவாப் அன்வாருதீனுக்கும் பிரெஞ்சுப் படைக்கும் இடையே இப்போர் நடைபெற்றது. அன்வாருதீன் ஆங்கிலேயரின் உதவியை நாடினார்.

கேப்டன் பாரடைஸ்தலைமையிலான மிகச் சிறிய பிரெஞ்சுப் படை மாபூஸ்கான் தலைமையிலான மிக வலிமை வாய்ந்த நவாப் படையினை தோற்கடித்தது. நன்கு பயிற்சி பெற்ற ஐரோப்பிய படை இந்திய படையை வெற்றி பெற்று தங்கள் மேலாண்மையை நிலைநாட்டிய முதல் நிகழ்வு இதுவே ஆகும்.

அய்-லா-சப்பேல் உடன்படிக்கை (1748)

ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் முடிவில் ஏற்பட்ட அய்-லா - சப்பேல் உடன்படிக்கையின் மூலம் முதல் கர்நாடகப் போர் முடிவுக்கு வந்தது.

இதன் படி மதராஸ் (சென்னை ) ஆங்கிலேயரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மாறாக வட அமெரிக்காவின் சில பகுதிகளை பிரான்சு பெற்றது.

இரண்டாம் கர்நாடகப் போர் (1749 - 1754)

கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை பிரச்சனையே இப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கர்நாடக நவாப் பதவிக்கு அன்வாருதீனும், சந்தா சாகிப்பும் உரிமை கோரினர். அதே போல் ஹைதராபாத் நிசாம் பதவிக்கு நாசிர் ஜங்கும் முசாபர் ஜங்-ம் உரிமை கோரினர்.

இதனால் தக்காண பகுதியில் பிரெஞ்சுக்காரர்கள் சந்தா சாகிப்பிற்கும், முசாபர் ஜங்-க்கும் உதவி செய்தனர். ஆங்கிலேயர்கள் அன்வாருதீனுக்கும், நாசிர்ஜங்-கும் உதவினர். இப்போர் மூலம் இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் எண்ணினர்.


ஆம்பூர் போர் (1749)

இதன் விளைவாக, ஆகஸ்ட் 3, 1749இல் ஆம்பூரில் நடைபெற்ற போரில் பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே, சந்தா சாகிப், முசாபர் ஜங் ஆகியோரின் கூட்டுப் படைகளால் கர்நாடக நவாப் அன்வாருதீன் தோற்கடிக்கப்பட்டு, கொல்லப்பட்டார். அன்வாருதீனின் மகன் முகமது அலி திருச்சிராப்பள்ளிக்கு தப்பி ஓடினார். சந்தாசாகிப்பை பிரெஞ்சுக்காரர்கள் கர்நாடக நவாப் ஆக்கினர். அதற்கு ஈடாக பாண்டிச்சேரியை சுற்றியுள்ள 80 கிராமங்களை வெகுமதியாக பிரெஞ்சுக்காரர்களுக்கு அவர் வழங்கினார்.

தக்காணத்திலும் பிரெஞ்சுக்காரர்களால் நாசிர் ஜங் தோற்கடிக்கப்பட்டு, கொல்லப்பட்டார். முசாபர் ஜங் ஐதராபாத்தின் நிசாம் ஆனார். புதிய நிசாம் பிரெஞ்சுக்காரர்களுக்கு போதிய வெகுமதி வழங்கினார். அவர் கிருஷ்ணா நதியின் தென் பகுதிகள் அனைத்திற்கும் டியூப்ளே -யை ஆளுநராக நியமித்தார். 1751இல் தன் மக்களால் முசாபர் ஜங் படுகொலை செய்யப்பட்டார். நாசிர் ஜங்-ன் சகோதரர் சலபத் ஜங் பிரெஞ்சுப் படைத் தளபதி புஸ்ஸியின் உதவியுடன் ஹைதராபாத் நிசாம் ஆனார். அவர் குண்டூர் மாவட்டத்தை தவிர வட சர்க்கார் முழுவதும் பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கினார். இதன் மூலம் டியூப்ளே -ன் அதிகாரம் உச்ச நிலையை அடைந்தது.

ஆற்காட்டுப் போர் (1751)

இத்தருணத்தில் டியூப்ளே, முகமது அலி தஞ்சம்புகுந்ததிருச்சி கோட்டையை முற்றுகையிட ஒரு படையை அனுப்பினார். இம்முயற்சியில் சந்தா சாகிப்பும் (கர்நாடக நவாப்) தன்னை பிரெஞ்சுப் படைகளோடு இணைத்துக் கொண்டார்.

இச்சமயத்தில் ஆற்காட்டை தாக்க இராபர்ட் கிளைவ் கம்பெனியிடம் அனுமதி கோரினார். ஆங்கிலேய கவர்னர் சாண்டர்ஸ், இராபர்ட் கிளைவ்-ன் திட்டத்திற்கு அனுமதி வழங்கினார். 200 ஆங்கில படையினர், 300 இந்திய படை வீரர்களுடன் கிளைவ் ஆற்காட்டை தாக்கி கைப்பற்றினார்.

ஆங்கில படைத்தளபதி ஸ்டிரங்கர் லாரன்ஸ் உதவியுடன் கிளைவ் ஆரணி, காவேரிபாக்கம் ஆகிய இடங்களில் பிரெஞ்சுப் படைகளை தோற்கடித்தார். அதேசமயத்தில், சந்தாசாகிப் திருச்சியில் கொலை செய்யப்பட்டார். அன்வாருதீனின் மகன் முகமது அலி ஆங்கிலேயரின் உதவியுடன் ஆற்காட்டு நவாப் ஆனார். இத்தோல்வியால் பிரான்சு நாட்டு அரசாங்கம் டியூப்ளே வை பாரிசுக்கு திரும்ப அழைத்தது.

பாண்டிச்சேரி உடன்படிக்கை (1755)

டியூப்ளேவைத் தொடர்ந்து பிரெஞ்சு ஆளுநராக பதவியேற்ற கோதேயூ ஆங்கிலேயருடன் பாண்டிச்சேரி உடன்படிக்கையினை செய்து கொண்டார்.

இதன் படி இரு நாடுகளும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது எனவும், போருக்கு முன்னர் இருந்த பகுதிகள் அவரவரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்பட்டது. மேலும் புதிய கோட்டைகளை கட்டக் கூடாது எனவும் கூறப்பட்டது. இவ்வுடன்படிக்கை மூலம் ஆங்கிலேயர் மேலும் வலிமை பெற்றனர்.

இரண்டாம் கர்நாடகப் போர் ஒரு முடிவற்ற நிலையை உணர்த்தியது. முகமது அலியை கர்நாடக நவாப் ஆக நியமித்ததின் மூலம் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தங்கள் மேலாண்மையை நிலைநாட்டினர். ஹைதராபாத்தில் பிரெஞ்சுக்காரர்கள் வலிமையுடன் காணப்பட்டாலும் இப்போர் அவர்கள் தக்காணப் பகுதியில் வலிமை குன்றியவர்கள் என்பதை நிரூபித்தது.

மூன்றாம் கர்நாடகப் போர் (1756 - 1763)

ஐரோப்பாவில் வெடித்த ஏழாண்டுப் போர் இந்தியாவில் மூன்றாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது. இச்சமயத்தில் ஆங்கில படைத் தளபதி இராபர்ட் கிளைவ் பிளாசிப் போரின் மூலம் வங்காளத்தில் ஆங்கில ஆதிக்கத்தை நிறுவியதுடன் மூன்றாம் கர்நாடகப் போருக்கு தேவையான நிதியையும் வழங்கினார்.

இப்போரில் பிரெஞ்சு படைகளை வழி நடத்த கவுண்-டி- லாலியை பிரெஞ்சு அரசாங்கம் நியமித்தது. அவர் கடலூரில் உள்ள செயிண்ட் டேவிட் கோட்டையை எளிதாக கைப்பற்றினார்.

கர்நாடகப் பகுதியிலிருந்து ஆங்கிலேயரை விரட்ட தன்னுடன் இணையுமாறு புஸ்ஸிக்கு, கவுண்-டி- லாலி உத்தரவிட்டார். புஸ்ஸி ஐதராபத்திலிருந்து புறப்பட்ட தருணத்தை பயன்படுத்தி வட சர்க்கார் (ஆந்திர பிரதேசம், ஒடிசா) பகுதிகளை கைப்பற்ற கர்னல் போர்டை வங்கத்திலிருந்து இராபர் கிளைவ் அனுப்பினார்.

வந்தவாசிப் போர் (1760)

1760 ஜனவரி 22ல் நடைப்பெற்ற இப்போரில் ஜெனரல் அயர் கூட் தலைமையிலான ஆங்கிலேயப் படை லாலி தலைமையிலான பிரெஞ்சுப் படையை முற்றிலும் தோற்கடித்தது. பின்னர் ஓர் ஆண்டுகள் இந்தியாவிலிருந்த அனைத்துக் குடியேற்றங்களையும் பிரெஞ்சுக்காரர்கள் இழந்தனர்.

கவுண்டிலாலி பிரான்சு நாட்டுக்கு திரும்ப அழைக்கப்பட்டு சிறையிலிடப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்டார்.

பாரிஸ் உடன்படிக்கை (1763)

ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போர் பாரிசு உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது. அதன்படி பாண்டிச்சேரி உட்பட இந்தியாவிலிருந்த பிரெஞ்சு குடியேற்றங்கள் அனைத்தும் பிரெஞ்சுக்காரர்கள் வசம் திரும்ப கொடுக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் தங்கள் பகுதிகளை பலப்படுத்தவும், படைகளை பெருக்கவும் தடைவிதிக்கப்பட்டது. இதன் மூலம் பிரெஞ்சு ஆதிக்கம் இந்தியாவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.


முதல் ஆங்கிலேய-மைசூர் போர் (1767-1769)

காரணங்கள்

ஹைதர் அலியின் வளர்ச்சி, அவர் பிரெஞ்சுக்காரர்களிடம் கொண்டிருந்த நட்புறவு ஆகியன ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் எதிர்ப்புக்கு காரணமாயின.

ஹைதர் அலிக்கு எதிராக மராத்தியர்கள், ஹைதராபாத் நிசாம், ஆங்கிலேயர்கள் இணைந்து முக்கூட்டணியை ஏற்படுத்தினர்.

போரின் போக்கு

தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையிலான ஆங்கிலப் படை உதவியுடன் ஹைதராபாத் நிசாம் 1767இல் மைசூர் மீது படையெடுத்தார். ஆங்கிலப் படையை ஹைதர் அலி தோற்கடித்து மங்களூரை கைப்பற்றினார். 1769 மார்ச் மாதம் ஹைதர் அலி மதராஸ் மீது படையெடுத்தார். இதனால் ஆங்கிலேயர்கள் 1769 ஏப்ரல் 4இல் அவரிடம் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.

மதராஸ் உடன்படிக்கை (1769)

போரின் முடிவில் மதராஸ் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது அதன்படி போருக்கு முன்னர் இருந்த பகுதிகளை இருதரப்பினரும் திரும்பப்பெற்றனர். மற்ற நாடு தாக்கும் பட்சத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்வது என உறுதி செய்துகொள்ளப்பட்டது.

இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் (1780-1784)

காரணங்கள்

1769 இல் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை ஆங்கிலேயர்கள் நிறைவேற்றத் தவறினர்.

1771இல் மராத்தியர்கள் ஹைதர் அலி மீது படையெடுத்த போது மதராஸ் உடன்படிக்கையின் படி ஆங்கிலேயர்கள் ஹைதர் அலிக்கு உதவவில்லை.

ஹைதர் அலியின் ஆட்சிக்குட்பட்ட பிரெஞ்சு குடியேற்ற பகுதியான மாஹியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். இந்நிகழ்வு ஆங்கிலேயருக்கு எதிராக ஹைதர் அலி, ஹைதராபாத் நிசாம், மராத்தியர்களின் முக்கூட்டணியை உருவாக்கியது.

போரின் போக்கு

1781இல் ஆங்கிலேய படைத் தளபதி சர் அயர்கூட் ஹைதர் அலியை பரங்கிப்பேட்டை (போர்டோ நோவா) என்ற இடத்தில் தோற்கடித்தார். மேலும் மைசூர் படைகள் சோளிங்கர் என்ற பகுதியிலும் தோல்வியை தழுவியது. போரின் போது புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஹைதர் அலி 1782இல் இறந்தார். அவரின் இறப்புக்குப் பின் அவரது மகன் திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக போரினைத் தொடர்ந்தார். 1783இல் திப்பு ஆங்கிலேய படைத்தளபதியான பிரிகேடியர் மேத்யூஸ் மற்றும் அவரது படை வீரர்களையும் கைது செய்தார். இது பின்னாளில் திப்புவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

மங்களூர் உடன்படிக்கை (1784)

1784 மார்ச் 7இல் ஆங்கிலேயருக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையே இவ்வுடன்படிக்கை கையெழுத்தானது. இருபிரிவினரும் போரில் கைப்பற்றிய பகுதிகளை திரும்ப அளிப்பதும், போர்க் கைதிகளை ஒப்படைப்பதும் என உடன்பாடு ஏற்பட்டது.

இதன் மூலம் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ்புதிதாக உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆதிக்கத்தை வலிமை மிக்க எதிரிகளான மராத்தியர்கள் மற்றும் ஹைதர் அலியிடம் இருந்து பாதுகாத்துக் கொண்டார். இச்சமயத்தில் அமெரிக்காவில் தங்கள் குடியேற்றங்களை பிரிட்டன் இழந்த போதிலும், வாரன் ஹேஸ்டிங்ஸ் எதையும் இந்தியாவில் இழக்கவில்லை. மாறாக இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிப் பகுதிகளை ஒருங்கிணைத்தார்.

மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் (1790-1792)

காரணங்கள்

மங்களூர் உடன்படிக்கைகுப்பின் ஆங்கிலேயருக்கு எதிராக வெளிநாடுகளுடன் கூட்டணி அமைக்கும் பொருட்டு பிரான்சு, மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு திப்பு சுல்தான் தன்னுடைய தூதுவர்களை அனுப்பினார்.

ஆங்கிலேய கூட்டணியில் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தை திப்பு சுல்தான் 1789இல் தாக்கினார்.

இச்சமயத்தில் திப்பு சுல்தானுக்கு எதிராக ஆங்கிலேயர்கள், ஹைதராபாத் நிசாம் மற்றும் மராத்தியர்களுடன் இணைந்து மூவர் கூட்டணியை உருவாக்கினர்.

போரின் போக்கு

இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இப்போரில் திப்பு சுல்தான் தனியாக எதிர்த்து போராடினார். இப்போர் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. தளபதி மேடோஸ் தலைமையிலான தாக்குதல் தோல்வியில் முடிந்தது. ஆகையால் 1790இல் தலைமை ஆளுநர் காரன்வாலிஸ் தானாகவே படையை வழிநடத்தினார். ஸ்ரீரங்கப்பட்டினத்தை தாக்குவதற்கு தடையாக இருந்த அனைத்து மலைக் கோட்டைகளையும் அவர் கைப்பற்றினார். நம்பிக்கை இழந்த திப்பு சுல்தான் ஆங்கிலேயரிடம் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார். அதனை ஏற்றுக்கொண்ட காரன்வாலிஸ் 1792இல் ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கையை திப்பு சுல்தானுடன் செய்து கொண்டார்.

ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கை (1792)

இவ்வுடன்படிக்கையின்படி, திப்பு தன்னுடைய ஆட்சிப்பகுதியில் பாதி பகுதியை ஆங்கிலேயருக்கு ஒப்படைத்தார்.

போர் இழப்பீட்டு தொகையாக 3.6 கோடி செலுத்த வேண்டும் என்றும், தன்னுடைய இரண்டு மகன்களை ஆங்கிலேயரிடம் பிணைக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டும் என திப்பு சுல்தான் கட்டாயப்படுத்தப்பட்டார்.

இதன் மூலம் ஆங்கிலேயர்கள் மலபார், குடகு மலை, திண்டுக்கல் மற்றும் பாரமஹால் (கோயம்புத்தூர், சேலம்) ஆகிய பகுதிகளைப் பெற்றனர்.

நான்காம் ஆங்கிலேய - மைசூர் போர் (1799)

திப்பு சுல்தான் 1792இல் ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கையின் மூலம் காரன்வாலிஸ் பிரபுவால் அவமரியாதை செய்ததை மறக்கவில்லை .

காரணங்கள்

திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக இம்முறையும் வெளிநாட்டு கூட்டணிக்காக அரேபியா, துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளுக்கு தன்னுடைய தூதர்களை அனுப்பினார்.

அச்சமயத்தில் எகிப்து மீது படையெடுத்த நெப்போலியனுடன் திப்பு தொடர்பு வைத்திருந்தார்.

பிரெஞ்சு அலுவலர்கள் ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு வருகை புரிந்து அவர்கள் ஜாக்கோபியன் கழகத்தை நிறுவினார்கள், மேலும் அங்கு சுதந்திர மரம் ஒன்றும் நடப்பட்டது.

போரின் போக்கு

1799இல் வெல்லெஸ்லி பிரபு திப்புவின் மீது போர் தொடுத்தார். இது குறுகிய காலத்தில் நடந்த, கடுமையான போராக இருந்தது. திட்டமிட்டபடி மைசூரின் மேற்கே பம்பாய் இராணுவம் தளபதி ஸ்டூவர்ட் தலைமையில் படையெடுத்தது. இச்சமயத்தில் மெட்ராஸ் இராணுவம் தலைமை ஆளுநரின் சகோதரர் ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையில் திப்பு சுல்தானை தாக்கியது. திப்பு தன்னுடைய தலைநகரம் ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு பின் வாங்கினார். 1799 மே 4ஆம் நாள் ஸ்ரீரங்கப்பட்டிணம் கைப்பற்றப்பட்டது. திப்பு சுல்தான் வீரதீரமாக போரிட்டாலும் இறுதியில் கொல்லப்பட்டார். இவ்வாறாக நான்காம் மைசூர் போர் முடிவுக்கு வந்தது. மேலும் ஒட்டுமொத்த மைசூரும் ஆங்கிலேயர் முன்பாக சரணடைந்தது.

போருக்கு பின் மைசூர்

கனரா, வயநாடு, கோயமுத்தூர், தாராபுரம் ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர் இணைத்து கொண்டனர்.

மீண்டும் இந்து உயர் குடும்பத்தை சேர்ந்த மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார் மைசூர் அரியணை ஏறினார்.

திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டனர்.


முதல் ஆங்கிலேய-மராத்தியப்போர் (1775-1782)

மராத்தியர்களின் பேஷ்வா, நாராயண ராவின் இறப்புக்குப் பிறகு அடுத்த பேஷ்வா யார் என்ற உரிமை பிரச்சனையில் ஆங்கிலேயர்கள் முதன்முதலில் தலையிட வேண்டியிருந்தது.

நாராயண ராவ் இறந்த பிறகு, ரகுநாத ராவ் (ராகோபா) பேஷ்வா ஆனார். ஆனால் அவரது அதிகாரத்திற்கு எதிராக பூனாவிலிருந்த ஒரு குழு நானா பட்னாவிஸ் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தது.

அக்குழு நாராயண ராவின் மறைவுக்குப்பின் அவரது மனைவியான கங்கா பாய்க்கு பிறந்த குழந்தையை (இரண்டாம் மாதவ ராவ்) பேஷ்வாவாக அங்கீகரித்தது. மேலும் அவருடைய பெயரில் ஆட்சிக் குழுவொன்றும் அமைத்தது.

அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்த ரகுநாத ராவ் பிரிட்டிஷ் உதவியை அணுகினார். இதன்படி, 1775ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும் ரகுநாத ராவுக்கும் இடையே சூரத் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இருப்பினும், கல்கத்தா பிரிட்டிஷ் கவுன்சில் சூரத் உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள வில்லை.

இருப்பினும் தலைமை ஆளுநரான வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை . பூனாவின் பாதுகாப்பரசுடன் ஒரு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கல்கத்தா பிரிட்டிஷ் கவுன்சில் பூனாவுக்கு கர்னல் அப்டனை அனுப்பியது.

அதன்படி, அப்டன் 1776ஆம் ஆண்டு பூனாவின் பாதுகாப்பரசுடன் புரந்தர் ஒப்பந்தத்தை செய்துகொண்டார்.

ஆயினும், பம்பாயில் ஆங்கில அரசாங்கத்தின் எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை.

1781ஆம் ஆண்டில், வாரன் ஹேஸ்டிங்ஸ் கேப்டன் பாப்ஹாமின் தலைமையின்கீழ் பிரிட்டிஷ் துருப்புக்களை அனுப்பினார்.

அவர் மராத்தியத் தலைவரான மகாதாஜி சிந்தியாவை பல போர்களில் தோற்கடித்து குவாலியரைக் கைப்பற்றினார்.

1782ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாதாஜி சிந்தியா இடையே சால்பை ஒப்பந்தம் கையெழுத்தானது.

விளைவுகள்

போரின் முடிவில் இரண்டாம் மாதவராவ் பேஷ்வாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரகுநாத ராவுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசுக்கு சால்செட் பகுதி வழங்கப்பட்டது.

இந்திய அரசியலில் சால்பை ஒப்பந்தம் பிரிட்டிஷாருக்கு செல்வாக்கை ஏற்படுத்தியது.

பிரிட்டிஷாருக்கும் மராத்தியர்களுக்கும் இடையே அடுத்த இருபது ஆண்டுகளுக்கு சமாதான உறவு நீடித்தது.

இரண்டாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் (1803-1805)

பேஷ்வா துணைப்படைத் திட்டதை ஏற்றுக்கொண்ட பிறகு, தௌலத் ராவ் சிந்தியா மற்றும் ரகோஜி போன்ஸ்லே ஆகியோர் மராத்திய சுதந்திரத்தை காப்பாற்ற முயற்சித்தனர்.

ஆங்கிலேயரின் இராணுவம் ஆர்தர் வெல்லஸ்லியின் தலைமையில், அஸ்ஸே மற்றும் அரகான் பகுதியில் சிந்தியா மற்றும் போன்ஸ்லே ஆகியோரின் கூட்டுப் படைகளை தோற்கடித்தது.

இவ்வெற்றிக்குப்பின் சிந்தியாவுடன் சுர்ஜீஅர்ஜுகான் ஒப்பந்தத்தையும், போன்ஸ்லேவுடன் தியோகான் ஒப்பந்தத்தையும் 1803 இல் ஆங்கிலேயர்கள் செய்துகொண்டனர்.

ஆனால் போரில் ஈடுபடாத யஸ்வந்த் ராவ் ஹோல்கர் (ஜஸ்வந்த் ராவ் ஹோல்கர் எனவும் அழைக்கப்படுகிறார்) இன்னும் ஆங்கிலேயர்களுக்கு அடிபணியவில்லை.

பின்னர் 1804இல் ஜெய்ப்பூர் பிரதேசத்தை ஹோல்கர் சூறையாடும் போது ஆங்கிலேயர்கள் அவருக்கு எதிராக போர் தொடுத்தனர்.

ஆங்கிலேயருக்கு எதிராக யஷ்வந்த ராவ் ஹோல்கர் இந்திய ஆட்சியாளர்களை இணைத்து ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சித்தார்.

ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்தது. இறுதியில் மராத்தியர்கள் தோற்கடிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களுக்கு கப்பம் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மேலும் மராத்திய தலைவர்கள் ஒருவருக்கொருவர் பிரிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டனர்.

விளைவுகள்

இப்போருக்கு பின் மராத்தியர்களின் வலிமை காலப்போக்கில் பலவீனமடைந்தது.

இந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தலையாய சக்தியாக மாறத்தொடங்கியது.

மூன்றாவது ஆங்கிலேய-மராத்தியப் போர் (1817-1818)

தங்களது மேலாண்மையை மீண்டும் பெற முயன்ற மராத்தியர்களோடு ஆங்கிலேயர்கள் மூன்றாவதாக ஒரு போரில் ஈடுபட்டனர்.

இப்போர், இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராத்திய சாம்ராஜ்யத்திற்கு இடையே இறுதி மற்றும் தீர்க்கமான மோதலாக அமைந்தது.

இப்போர், ஆங்கில படைவீரர்கள் மராத்திய பகுதிகளை ஆக்கிரமிக்கும் போது தொடங்கியது.

இந்த ஆக்கிரமிப்பில் தலைமை ஆளுநர் ஹேஸ்டிங்ஸ் பிரபுவுக்கு, ஜெனரல் தாமஸ் ஹிஸ்லாப் தலைமையின் கீழ் ஒரு படைப்பிரிவு உதவியது.

பேஷ்வா இரண்டாம் பாஜி ராவின் படைகளை தொடர்ந்து, நாக்பூரின் இரண்டாம் மூதோஜி போன்ஸ்லேவும், இந்தூரின் மூன்றாம் மல்ஹர் ராவ்ஹோல்கரும் ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர்.

ஆனால் குவாலியரின் தெளலத் ராவ் சிந்தியா மட்டும் நடுநிலை வகித்தார். காட்கி, கோர்கான் ஆகிய இடங்களில் நடைபெற்ற போர்களில் பேஷ்வா தோற்கடிக்கப்பட்டார், பேஷ்வாவின் படைகள் பல இடங்களில் அவர் பிடிபடுவதைத் தடுத்து நிறுத்தின.

இதனைத் தொடர்ந்து சித்தாபால்டி போரில் போன்ஸ்லேவும், மகித்பூர் போரில் ஹோல்கரும் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.

விளைவுகள்

இப்போரின் முடிவில் மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது மற்றும் பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது.

பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் பெரும்பாலான பகுதிகள் பம்பாய் மாகாணத்தோடு இணைக்கப்பட்டன.

தோற்கடிக்கப்பட்ட போன்ஸ்லே மற்றும் ஹோல்கரின், மராத்திய பகுதிகளான நாக்பூர், இந்தூர் ஆகியவை ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டன.

மராத்தியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வருடாந்திர ஓய்வூதியம் 8 லட்சம் ரூபாய்வழங்கப்பட்டது.