ஆங்கிலேயர்களின்
ஆட்சியின்கீழ் நிலவருவாய் கொள்கை
நிலையான நிலவரி
திட்டம்
1765இல் இராபர்ட் கிளைவ் வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா
ஆகிய பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை பெற்ற பின்பு அங்கு அவர் ஓராண்டு நில வருவாய்
திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் பிறகு வாரன் ஹேஸ்டிங்ஸ் தலைமை ஆளுநராக பதவியேற்ற
பின்பு ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை ஐந்தாண்டு நில வருவாய் திட்டமாக மாற்றி பின்பு
ஓராண்டு திட்டமாக மாற்றினார். ஆனால் காரன்வாலிஸ் பிரபு தலைமை ஆளுநரான பிறகு இத்திட்டத்தை
பத்தாண்டு நில வருவாய் திட்டமாக 1793 இல் மாற்றினார். இத்திட்டம் நிலையான நிலவருவாய்
திட்டம் என்றழைக்கப்படுகிறது.
இத்திட்டம் வங்காளம், பீகார், ஒரிசா, உத்திர பிரதேசத்தில்
வாரணாசி பகுதி மற்றும் வடக்கு கர்நாடகம் ஆகிய பகுதிகளில் கொண்டுவரப்பட்டது. ஆங்கில
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த இத்திட்டம்
ஜமீன்தாரி, ஜாகீர்தாரி, மல்குஜாரி மற்றும் பிஸ்வேதாரி என்னும் பல பெயர்களால் அழைக்கப்பட்டது.
நிலையான நிலவரி
திட்டத்தின் சிறப்பு கூறுகள்
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தும்
வரை ஜமீன்தார்கள் நில உடைமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
விவசாயிகளிடமிருந்து வரியை வசூல் செய்யும் அரசின் முகவர்களாக
ஜமீன்தார்கள் செயல்பட்டனர்.
ஜமீன்தார்கள் வணிகக்குழுவிற்கு செலுத்தி வந்த வரி நிலையாக
நிர்ணயிக்கப்பட்டு, எந்த சூழ்நிலையிலும் உயர்த்தப்படமாட்டாது என உறுதியளிக்கப்பட்டது.
விவசாயிகளிடமிருந்து வசூலித்த 10/11 பங்கு வரியினை ஜமீன்தார்கள்
ஆங்கில அரசுக்கு செலுத்தினர்.
ஜமீன்தார்கள், விவசாயிகளுக்கு பட்டா (எழுதப்பட்ட ஒப்பந்தம்)
வழங்கினர். இதன் மூலம் விவசாயிகள் அந்நிலத்தை உழும் காலம் வரை குத்தகைதாரர்களாக கருதப்பட்டனர்.
அனைத்து நீதித்துறை அதிகாரங்களும் ஜமீன்தார்களிடமிருந்து
திரும்ப பெறப்பட்டது.
நிறைகள்
தரிசு நிலங்கள் மற்றும் காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன.
ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளராயினர்.
நீதி வழங்கும் பொறுப்பிலிருந்து ஜமீன்தார்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஜமீன்தார்கள் ஆங்கில அரசுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக மாறினர்.
ஆங்கில அரசுக்கு நிலையான வருவாயை கிடைப்பதை உறுதி செய்தது.
குறைகள்
ஆங்கிலேய அரசு விவசாயிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை.
விவசாயிகளின் உரிமைகள் மறுக்கப்பட்டதோடு, ஜமீன்தார்களின்
பொறுப்பில் விடப்பட்டனர்.
விவசாயிகள் பெரும்பாலும் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர்.
இந்த திட்டத்தினால் ஜமீன்தார்கள் சோம்பேறிகளாகவும், ஆடம்பரப்
பிரியர்களாகவும் மாறினர்.
வங்காளத்தின் பல கிராமப்புறங்களில் ஜமீன்தார்களுக்கும், விவசாயிகளுக்குமிடையே
பல மோதல்கள் ஏற்பட்டன.
இரயத்துவாரி
முறை
இரயத்துவாரி முறை 1820இல் தாமஸ்மன்றோ மற்றும் கேப்டன் ரீட்
என்பவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறை மதராஸ், பம்பாய், அசாம் பகுதிகள் மற்றும்
கூர்க் ஆகிய இந்திய மாகாணங்களில் கொண்டுவரப்பட்டது. இம்முறையின் மூலம் நிலத்தின் உரிமையானது
விவசாயிகளின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் நிலத்தின் உரிமையாளராயினர்.
ஆங்கிலேய அரசு நேரடியாகவே விவசாயிகளிடமிருந்து வரிவசூலைப் பெற்றது. தொடக்கத்தில் நிலவருவாயனது
விளைச்சலில் பாதி என நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இது தாமஸ் மன்றோ அவர்களால் விளைச்சலில்
மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டது. இம்முறையில் நில வருவாயானது மண் மற்றும் பயிரின்
தன்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.
பொதுவாக 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலத்தின் மீதான
குத்தகை மாற்றியமைக்கப்பட்டது. இத்திட்டத்தில் விவசாயிகளின் நிலைமை மிகவும் பாதுகாப்பானதாக
இருந்தது. உண்மையில், அரசு விவசாயிகளிடமிருந்து நிலவருவாயை வரியாக அல்லாமல் குத்தகையாகவே
பெற்றுக் கொண்டது.
இரயத்துவாரி
முறையின் சிறப்பு கூறுகள்
வருவாய் ஒப்பந்தம் நேரடியாக விவசாயிகளுடன் செய்துகொள்ளப்பட்டது.
நில அளவு மற்றும் விளைச்சலின் மதிப்பீடு கணக்கிடப்பட்டது.
அரசு, விளைச்சலில் 45லிருந்து 50 சதவீதம் வரை வரியாக நிர்ணயம்
செய்தது.
இரயத்துவாரி
முறையால் ஏற்பட்ட விளைவுகள்
பெரும்பாலான பகுதிகளில் நிலவருவாய் மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது.
சிறப்பான பருவக் காலங்களில் கூட விவசாயிகள் நிலவரி செலுத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
அரசு, ஜமீன்தார்களுக்குப் பதிலாக விவசாயிகளை சுரண்டியது.
மகல்வாரி முறை
மகல்வாரி முறை, என்பது ஹோல்ட் மெகன்சி என்பவரது சிந்தனையில்
உதித்த, ஜமீன்தாரிமுறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமே ஆகும். கங்கைச் சமவெளி , வடமேற்கு
மாகாணங்கள், மத்திய இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் பஞ்சாப் போன்ற பகுதிகளில்
1822இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இராபர்ட் மெர்தின்ஸ் பர்ட் என்பவரின் வழிகாட்டுதலின்படி
1833இல் வில்லியம் பெண்டிங் பிரபு, இம்முறையில் சில அடிப்படை மாற்றங்களை கொண்டு வந்தார்.
மகல் அல்லது கிராம விளைச்சலின் அடிப்படையில் இம்முறையில் வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டது.
மகல் பகுதியின் அனைத்து உரிமையாளர்களும் நிலவருவாய் செலுத்துவதற்கு கூட்டு பொறுப்புடையவர்களாவர்.
தொடக்கத்தில், மொத்த விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு நிலவருவாய் அரசின் பங்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் வில்லியம் பெண்டிங் பிரபு மொத்த விளைச்சலில் நிலவருவாய் 50 சதவீதம் எனக் குறைத்தார்.
இம்முறையில் நிலவருவாயை கிராமம் முழுவதும் வசூல் செய்து அரசுக்கு செலுத்த ஒரு கிராமத்
தலைவர் (Lambardar) நியமிக்கப்பட்டிருந்தார். இந்த முறை முதலில் ஆக்ரா, அயோத்தி போன்ற
இடங்களில் அமுல்படுத்தப்பட்டது. பின்னர், ஐக்கிய மாகாணங்களின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இத்திட்டத்திலும் அதிகமான வரிச்சுமைகள் அனைத்தும் விவசாயிகள் மீதே விழுந்தது.
மகல்வாரி முறையின்
சிறப்பு கூறுகள்
கிராமத் தலைவர் அரசுக்கும், கிராம மக்களுக்குமிடையே இடைத்
தரகராக செயல்பட்டார்.
இத்திட்டம் கிராமவாரியான மதிப்பீடாக இருந்தது. ஒரே நபர் பல
கிராமங்களை தன் வசம் வைத்திருந்தார்.
கிராம நிலங்களுக்கு, கிராமத்தை சேர்ந்த சமுதாயத்தினரே உரிமையாளராக
இருந்தனர்.
மகல்வாரி முறையால்
ஏற்பட்ட விளைவுகள்
கிராமத் தலைவர், சலுகைகளை தமது சொந்த விருப்பங்களின் அடிப்படையில்
தவறாகப் பயன்படுத்தினார்.
இம்முறையானது விவசாயிகளுக்கு இலாபகரமானதாக இல்லை.
இம்முறையானது ஜமீன்தாரி முறையின் திருத்தியமைக்கப்பட்ட வடிவமாக
இருந்தது. மேலும் இது கிராமத்தின் உயர் வகுப்பினருக்கு இலாபகரமானதாக அமைந்தது.
விவசாயிகளின்
மீது ஆங்கில நிலவருவாய் முறையின் தாக்கங்கள்
அனைத்து நிலவரி முறைகளும் பொதுவாக, நிலத்திலிருந்து அதிகபட்ச
வருமானம் பெறுவதாகவே இருந்தது. இதனால் நில விற்பனை அதிகரிப்பு மற்றும் விவசாயத் தொழில்
அழிவிற்கு வழிவகுத்தது.
விவசாயிகள் அதிக வரிவிதிப்பினால் பாதிக்கப்பட்டனர். அதிக
வரிச்சுமை மற்றும் பஞ்சத்தினால் மக்கள் வறுமையாலும், கடன்சுமையாலும் அவதிப்பட்டனர்.
இதனால் விவசாயிகள் நிலத்தை விலைக்கு வாங்குவோர் மற்றும் வட்டிக்குப் பணம் தருபவர்களை
தேடிச் சென்றனர். அவர்கள் விவசாயிகளிடமிருந்த நிலத்தை விலைக்கு வாங்கி பெரும் செல்வந்தர்களாயினர்.
ஜமீன்தார்கள், வட்டிக்காரர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர்களால்
ஏழை விவசாயிகள் சுரண்டப்பட்டனர்.
இந்திய கிராமங்களுக்கான நிலைப்புத் தன்மையும் தொடர்ச்சியான
நிலையும் அசைக்கப்பட்டன.
ஆங்கிலேய இறக்குமதி பொருட்களால் இந்தியக் குடிசைத் தொழில்கள்
மறைந்தன. விவசாயிகள் வருமானத்திற்கு வேறு வழியின்றி தவித்தனர்.
பழமையான பழக்க வழக்கங்கள் மாற்றப்பட்டு புதிய சட்ட அமைப்பு,
நீதிமன்ற நடைமுறைகள் வழக்கத்திற்கு வந்தன.
நிலத்தின் உண்மையான உரிமையாளர்களாகவும், உற்பத்தியின் பெரும்
பங்குதாரர்களாகவும் இருந்த விவசாயிகளுடைய உழைப்பின் பலனானது, ஆங்கிலேயரின் கொள்கையால்,
ஒரு குறிப்பிட்ட சலுகையை பெற்ற சமுதாயத்திற்கு மட்டுமே நன்மையளிப்பதாக இருந்தது.