சத்யசோதக் சமாஜம் (1873)
இதுவரை விவாதிக்கப்பட்ட இயக்கங்கள் பெரும்பாலும் மேல் சாதியாகக் கருதப்பட்ட சமூகங்களின் மேல் அதிக கவனம் செலுத்தின. ஆனால் சில குறிப்பிட்ட இயக்கங்கள் ஒடுக்கப்பட்ட சமூகங்களை அணிதிரட்டி அவர்களிடம் தங்கள் கொள்கைகளை விளக்கின. அவற்றுள் மிக முக்கியமான இயக்கம் ஜோதிபா பூலேயின் சத்ய சோதக் சமாஜமாகும்.
1827இல் பிறந்த ஜோதிபா பூலே மாலி (தோட்ட வேலை செய்வோர்) சமூகத்தைச் சேர்ந்தவராவார். தொடக்கக் கல்வியைக் கிறித்தவ சமய நிறுவனப் பள்ளியில் கற்ற அவர் இடையில் கல்வியைத் தொடர முடியாமல் நின்றுவிட்டார். ஜோதிபா பூலே மேல் சாதியினரின் அடக்குமுறைக்கு எதிராக வாழ்நாள் முழுவதுமான நீண்ட போராட்டத்தை மேற்கொண்டார். உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமென்ற தாகத்தினால் வேதங்கள், மனுசங்கிதை, புராணங்கள், புத்தர், தீர்த்தங்கரர் ஆகியோரின் கருத்துக்கள், இடைக்கால பக்தி இயக்கத்தைச் சேர்ந்த சமயப் பெரியோர்கள் என மிக விரிவான வாசிப்பை மேற்கொண்டார். மேற்கத்திய சிந்தனைகளோடும் கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களோடும் தன்னைப் பரிச்சயப்படுத்திக் கொண்டார். ஒட்டுமொத்தப் பண்பாட்டையும் மரபுகளையும், பகுத்தறிவு மற்றும் சமத்துவம் ஆகிய இரண்டு அளவுகோல்களைக் கொண்டு சீர் தூக்கிப் பார்த்தார். சமத்துவம் எனும் கொள்கை சாதிய முறையையும் அதிகாரமிக்க குடும்ப அமைப்பையும் பெண்களின் கீழான நிலையினையும் ஒட்டுமொத்தமாக மறுக்க கோரியது. பகுத்தறிவு எனும் கொள்கை மூட நம்பிக்கைகளும் சடங்குகளும் நீக்கப்பட வேண்டுமெனக் கோரியது.
அரசியல், சமூகம், பொருளாதாரம், மதம் ஆகியவை தொடர்பான பிரச்சனைகளில் அவர் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்தார்.
சாதி முறையானது பிராமணர் அல்லாதோரின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி, பல நூற்றாண்டு காலமாக நிலவி வரும் சமத்துவமின்மை, சமூகத் தாழ்வு நிலை ஆகியவற்றுக்கு எதிராக அவர்களைப் புரட்சி செய்ய ஒருங்கிணைந்து போராட்டங்களை மேற்கொள்ளச் செய்தார். இந்த லட்சியங்களை அடைவதற்காக சத்ய சோதக் சமாஜம் (உண்மை தேடும் சங்கம்) என்ற அமைப்பை 1873இல் நிறுவினார். மக்களின் கல்வியே விடுதலைக்கான புரட்சிகரமான காரணியாக இருக்கும் என்று கூறினார். இவர் எழுதிய முக்கிய நூல் ‘குலாம்கிரி’ (அடிமைத்தனம்) என்பதாகும்.
சமூகத்தில் பெண்களும் வறுமையில் உழல்வோரும் நசுக்கப்பட்டோருமே மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். பெண்களின் விடுதலை என்பது சமூகத்தின் ஏனைய வர்க்கங்களின் விடுதலையோடு இணைந்துள்ளது என்று வாதிட்டார். வர்க்கங்களுக்கிடையேயான சமத்துவம் மற்றும் ஆண் பெண் சமத்துவத்தை முன்வைத்தார். திருமணத்தின் போது மணப்பெண்ணின் கல்வி உரிமையை ஏற்றுக் கொள்வதாக மணமகனை உறுதியளிக்கும்படி கூறினார்.
பூலே தன்னுடைய கருத்துக்களை உண்மையான போராட்டங்களாக மாற்ற விரும்பினார். மக்களுக்குக் கட்டாய தொடக்கக் கல்வியை விவசாய வர்க்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்குமாறு ஆங்கில அரசாங்கத்தைப் பூலே வற்புறுத்தினார். அவர் 1851இல் புனேயில் பெண்களுக்கென்று ஒரு பள்ளியையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு பள்ளியையும் தனது துணைவியார் சாவித்ரியின் உதவியோடு தொடங்கினார். தீண்டத்தகாதவர்களுக்காக ஒரு பள்ளியையும் கைம்பெண்களின் குழந்தைகளுக்காக ஒரு இல்லத்தையும் நிறுவினார். பிற்காலத்தில் மகாராஷ்டிராவில் பிராமணரல்லாதோர் இயக்கம் இவருடைய பணிகளால் தோன்றியது.
பண்டித ரமாபாய் (1858 - 1922)
பண்டித ரமாபாய் இந்தியாவில் பெண் விடுதலைக்காகப் போராடிய முன்னணித்தலைவர்களில் ஒருவராவார். சிறந்த கல்விப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். சமஸ்கிருத மொழியில் ஆழமான புலமை பெற்றிருந்ததால் அவருக்கு 'பண்டித', 'சரஸ்வதி' எனும் பட்டங்கள் வழங்கப்பட்டன. பெற்றோரின் மரணத்திற்குப் பின்னர் ரமாபாயும் அவருடைய சகோதரரும் நாட்டின் பல பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். 1878இல் அவர்கள் கல்கத்தா சென்றனர். இரண்டாண்டிற்குப் பின்னர் அவருடைய சகோதரரும் காலமானார். 1880இல் சமூகத்தின் கீழ்மட்டக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வங்காளியைத் திருமணம் செய்து கொண்டார். அக்காலத்திலேயே வேற்று சாதியைச் சேர்ந்த வேற்று மொழி பேசக்கூடிய ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் நெஞ்சுரம் அவருக்கிருந்தது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர் கணவரும் இயற்கை எய்தவே, புனே திரும்பிய அவர் ரானடே, பண்டார்க்கர் ஆகிய தலைவர்களின் உதவியுடன் ஆரிய மகிளா சமாஜ் எனும் அமைப்பை நிறுவினார். 1882இல் 300 பெண்கள் இவ்வமைப்பில் கல்வி கற்றனர்.
ரானடே, பண்டார்க்கர் ஆகியோரின் உதவியோடு கைவிடப்பட்ட விதவைகளுக்காக ‘சாரதா சதன்’ (வீடற்றவர்களுக்கான இல்லம்) எனும் அமைப்பைத் தொடங்கினார். வெகு விரைவிலேயே இந்து பெண்களைக் கிறித்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டதால் தனது செயல்பாடுகளைப் புனேவுக்கு அருகேயுள்ள கேத்கான் எனும் இடத்திற்கு மாற்றினார். அங்கு ‘முக்தி சதன்’ (சுதந்திர இல்லம்) எனும் அமைப்பை நிறுவினார். அந்நிறுவனத்தில் 2000 பெண்களும் குழந்தைகளும் தங்கியிருந்தனர். அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்றுவதற்காக தொழிற்பயிற்சி வழங்கப்பட்டது.
ஸ்ரீ நாராயண குரு
கேரளத்தை மையமாகக் கொண்ட இந்த, ஸ்ரீ நாராயண குரு தர்ம பரிபாலன யோகம் உயர் சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தாருக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடுகளிலிருந்து தோன்றியது. இவ்வியக்கத்தை தோற்றுவித்த ஸ்ரீநாராயணகுரு, கள் இறக்குவதைத் தொழிலாகக் கொண்ட கேரளத்து ஈழவ சமூக இயக்கத்தின் ஈட்டி முனையாக விளங்கினார். ஈழவர்கள் கேரள மக்கள் தொகையில் தனிப் பெரும்பான்மையாக 26 விழுக்காடு உள்ளனர். ஸ்ரீநாராயண குரு 1902இல் “ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம்” (Sri Narayanaguru Dharma Paripalana Yogam (SNDP)) எனும் அமைப்பை நிறுவினார். இவ்வமைப்பு
i) பொதுப்பள்ளிகளில் சேர்வதற்கான உரிமை
ii) அரசுப் பணிகளில் அமர்த்தப்படுதல்
iii) சாலைகளைப் பயன்படுத்துவதற்கான, கோவில்களுக்குள் செல்வதற்கான உரிமை
iv) அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற பிரச்சனைகளைக் கைகளில் எடுத்தது. இவ்வியக்கம் சமூகத்தில் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு மாறுதல், பாரம்பரியமான அதிகார விநியோக முறையில் மாற்றம், பிற்படுத்தப்பட்ட வர்க்கங்களின் கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்துப் பெருவடிவிலான சம்மேளனமாக மாற்றுதல் போன்ற கூட்டமைப்பு மாற்றங்களைக் கொணர்ந்தது. கோவில்களுக்குள் ஈழவர்கள் நுழைவதற்கிருந்த தடைகளுக்கு எதிராக ஸ்ரீநாராயண குரு புதிய கோவில்களை நிறுவியதோடு ஈழவ சமூகம் தன்னைத்தானே நவீனப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு சக்தி கொண்டதாக மாற்றினார். கவிஞர் குமரன் ஆசான் டாக்டர் பல்பு, சகோதரன் ஐயப்பன் போன்ற மகத்தான ஆளுமைகள் இவ்வியக்கத்திலிருந்து தோன்றி, கேரளச் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தினர். வைக்கம் சத்யாகிரகத்தில் நேரடியாகப் பங்கு பெறாவிட்டாலும், கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஈழவர்கள் நுழைவதற்கான தடைகளுக்கு எதிராகப் போராட்டங்களை ஏற்பாடு செய்தார். அவை எதிர்கால கோவில் நுழைவு இயக்கங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தன.